இலங்கை அணியுடன் காலியில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இலகு வெற்றியை பதிவு செய்துள்ளதோடு, இரண்டு போட்டிகளைக் கொண்ட தொடரை 2-0 என வெற்றி கொண்டுள்ளது.
164 எனும் ஓட்ட வெற்றி இலக்கை நோக்கிய இங்கிலாந்து அணியின் பயணம் இன்றைய (25) 4ஆம் நாளிலேயே நிறைவடைந்ததோடு, ஒரு நாளும் மீதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நேற்றைய நாளின்போது 9 விக்கெட்டுகளை இழந்து 339 ஓட்டங்களை பெற்றிருந்த இங்கிலாந்து அணி இன்றையதினம் சகல விக்கெட்டுகளையும் இழந்து 344 ஓட்டங்களை பெற்றது.
37 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சிற்கு முகம் கொடுக்க முடியாமல் தடுமாறியது. லசித் எம்புல்தெனியவைத் தவிர (ரமேஷ் மெண்டிஸ் 16) ஏனைய வீரர்கள் 15 இற்கும் குறைவான ஓட்டங்களையே பெற்றனர்.
அந்த வகையில் இன்றைய நாளின் ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி, பகல் போசன இடைவௌயில் 6 விக்கெட்டுகளை இழந்து 67 ஓட்டங்களை பெற்றிருந்தது. பின்னர் தேநீர் இடைவெளியின்போது 9 விக்கெட்டுகளை இழந்து 126 ஓட்டங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து வீசப்பட்ட அடுத்த ஓவரிலேயே இலங்கை அணியின் இன்னிங்ஸ் ஒரே நாளுக்குள் நிறைவுக்கு வந்தது.
முன்னதாக, போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 381 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 344 ஓட்டங்களை பெற்றது. 37 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி 35.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 129 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து 164 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 43.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் தொடரின் நாயகனாகவும், போட்டியின் நாயகனாகவும் தெரிவானார். ஏற்கனவே இதே மைதானத்தில் இடம்பெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2ஆவது டெஸ்ட், காலி, ஜன 22 – 25 2021
1ஆவது இன்னிங்ஸ்
இலங்கை 381/10
அஞ்சலோ மெத்திவ்ஸ் 110 (238
நிரோஷன் திக்வெல்ல 92 (144)
தில்ருவன் பெரேரா 67 (170)
லஹிரு திரிமான்ன 43 (95)
ஜேம்ஸ் அண்ர்சன் 6/40 (29.0)
மார்க் வூட் 3/84 (28.0)
இங்கிலாந்து 344/10
ஜோ ரூட் 186 (309)
ஜோஸ் பட்லர் 55 (95)
டொம் பெஸ் 32 (95)
லசித் எம்புல்தெனிய 7/137 (42.0)
தில்ருவன் பெரேரா 1/86 (32.1)
ரமேஷ் மெண்டிஸ் 1/48 (16.0)
2ஆவது இன்னிங்ஸ்
இலங்கை 126/10
லசித் எம்புல்தெனிய 40 (42)
ரமேஷ் மெண்டிஸ் 16 (20)
குசல் பெரேரா 14 (25)
லஹிரு திரிமான்ன 13 (33)
டொம் பெஸ் 4/49 (16.0)
ஜெக் லீச் 4/59 (14.0)
ஜோ ரூட் 2/0 (1.5)
இங்கிலாந்து 164/4
டொம் சிப்லி 56 (144)*
ஜோஸ் பட்லர் 46 (48)*
ஜொன்னி பெர்ஸ்டோ 29 (28)
லசித் எம்புல்தெனிய 3/73 (20.0)
ரமேஷ் மெண்டிஸ் 1/48 (10.0)