
எது சுதந்திரம்?
நடுநிசி சாமமதில்
நல்ல செய்தி கேட்டோம்
நாடு சுதந்திரமடைந்ததாம்
தாராளமாய் தடைகள்
தங்குதடையின்றி வந்தும்
தளர்ச்சி காணவில்லை
தயங்கி நிற்கவில்லை – சுதந்திர
விடியலை நோக்கி
சுழன்றடித்து நகர்ந்தோம்………
சுதந்திரம் பெற்றோமென
மார்தட்டி எழுபத்துமூன்றாண்டுகள்
கடந்துவிட்டன – ஆனால்
நம் எண்ணங்கள் இன்றும்
சிறைபிடிக்கப்பட்டுத்தானுள்ளன……
எது சுதந்திரம்?
சின்னச்சின்னதாய்
சிந்தும் பிரச்சினையிலும்
சிறுபான்மையினம்
சிறகொடிந்து தவிப்பதா?
இல்லை,
அழுத்கம அவலங்கள்
கொஸ்லாந்தை சரிவுகள்
முல்லையின் வெள்ளங்களென
இயற்கையை தாண்டாமல்
தாண்டி வர
கலவரங்களைக் காவிவந்து
சிறுபான்மையினரின் தலைமேல்
குவிப்பதா?
இல்லை,
பேதங்களற ஒன்றிணைவோமென்று
பேட்டிகளில் சொல்லிவிட்டு
உறவுகள் இழந்த
கவலை மறைத்து – அவர்களின்
உடல்களை புதைப்பதில்
போராடும் போராட்டமா?
எது சுதந்திரம்?
குளிர் கூதல் பார்க்காமல்
நாட்டின் வளர்ச்சிக்காய்
நாய்படா பாடுபடும் – என்
மலையக மக்களின்
அவலங்கள் ஒரு பக்கம்..
கஞ்சிக்கும் வழியின்றி
கெஞ்சி நிற்கும் சிறுபான்மை
சமூகத்தின் – போலி
சிரிப்புகள் ஒரு பக்கம்..
யாரோ செய்த தவறுக்கு
ஒரு இனமே கூனிக்குறுகும்
சோனக சமூகமதின்
சோகங்கள் ஒரு பக்கம்..
திறமைக்கேற்ற வேலையின்றி
வேலைக்கேற்ற சம்பளமின்றி
வெள்ளை வேட்டிக்காரனும்
வெள்ளையனுக்கு தலைகுனியும்
வெட்கக்கேடு ஒரு பக்கம்..
இத்தனையும் நம்மடியில் சுமந்து
படிப்பில் மாத்திரம் கிடைத்த
சுதந்திரத்தை போற்றி என்ன பயன்?
எது சுதந்திரம்………..?
வெட்டி வீராப்பாய்
வீரவசனம் பேசுவதைவிடுத்து
சாதிமத பேதங்கள்
நாதியற்று போக
மனதளவிலும் மற்றவருக்கு
வஞ்சகமெண்ணா
சந்ததி பெருக…
சிறுபான்மை
பெரும்பான்மையென்ற
எண்ணமகழ
இலங்கைராய்
இணைந்தாலதுவே
சுதந்திரம்.
மிதுஷா செல்வராஜா (Mithusha Selvarajah)
மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறை
யாழ் பல்கலைக்கழகம்.