ஊரடங்கு காரணமாக வேலை இல்லை என்பதால் கூட்டம் இல்லை என்று டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலரில் டோக்கன் என்று வழங்கி மது விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கோவில்பட்டி, கயத்தார், கழுகுமலை, எட்டயபுரம், விளாத்திகுளம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக்கிலும் கூட்டம் மிகக் குறைவாக உள்ளது. அதிகபட்சமாக 6 முதல் 8 பேர் மட்டுமே வரிசையில் நிற்கின்றனர். அனைவருக்கும் கடையின் முன்பு டோக்கன் வழங்கப்படுகிறது. அதன் பின்னர்தான் மதுபாட்டில்கள் வழங்கப்படுகின்றன. ஒரு டோக்கனுக்கு 4 மதுபாட்டில்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் குறைந்தது 2 மதுபாட்டில்கள் வாங்கிச் செல்கின்றனர்.
கோவில்பட்டி புதுரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் ஒரு வயதான பெண்மணி தன் கணவருக்காக வரிசையில் நின்று இரண்டு மதுபாட்டில்கள் வாங்கினார். இது குறித்து அந்த பெண்மணியிடம் கேட்ட போது, தன்னுடைய கணவர் மது அருந்தும் பழக்கம் உடையவர் என்றும் அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவருக்காக, தான் மது வாங்கிச் செல்வதாகத் தெரிவித்தார்.
ஊரடங்கு காரணமாக வேலை இல்லை என்பதால் கூட்டம் இல்லை என்று டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.