இப்படிதான் ஒரு நாள் கந்தையா வாத்தியார் விழுந்தடிது ஒரு மாதிரி பேரூந்தில் ஏறினார் யாழ்ப்பாணம் போவதற்கு
பேரூந்து முழுவதும் சன நெருசல் நிற்பது என்றால் மிகவும் கடினம் அங்குமிங்கும் சுற்றிப்பார்தார் எல்லாம் தெரிந்த முகம் பலர் கடந்த வருடம் கந்தையா வாத்தியார் ஓய்வு பெறும் போது வாத்தியாரிடம் கற்றவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சை இறுதி நாள் முடிந்து வருவது அப்படியே தெரிந்து வெள்ளை சட்டை முழுவதும் பேனா மை, உடுப்பு துவைக்கும் போது பயன்படுத்தும் நீலம் எல்லாம் தெளித்தவாறு வந்தார்கள்
எல்லாம் சினிமா செய்த வேலை ஒன்றும் சுயமா செய்வதில்லை இந்தியா செய்வதை அப்படியே எங்கட சனங்கள் செய்வார்கள் எப்பதான் இந்த நிலை மாறுமோ. ஏதோ தங்களுடைய சொந்த உழைப்பில் படித்து முடித்தது போல் இந்த உடை முழுவதையும் அழுக்காக்கி வைத்திருக்கிறார்கள்.
எல்லோரும் ஒன்றைப் புரிய வேண்டும் வடக்கில் பெற்றோரின் உழைப்பிலும் அரசின் இலவசக் கல்வியிலும் படிப்போர் தான் அதிகம், வழமை இப்படி இருக்க ஏன் தான் இந்தப் பிள்ளைகள் இப்படி… கல்விக்கான செலவின் நன்மை அடையப்படுறாதா? என்பது ஒரு கேள்விக்குறியே….. சரி “என்னால் நிற்க முடியாமல் இருக்கு யாராவது இருக்கை தந்தால் நல்லது என்று மனதில் நினைத்தவாறு மீண்டும் அங்குமிங்கும் சுற்றிப்பார்த்தார்”
எல்லோருகம் கண்டும் காணாமல் இருந்தார்கள் அந்தக் காலத்தில் நாங்கள் இப்படியா? எங்களுடைய குருவைக் கண்டால் குரு பக்தியில் எழுந்து இருக்கை கொடுப்போம் இப்ப ஒரு பேச்சுக்கு கூட இந்தப் பிள்ளைகள் கேட்கிதுகள் இல்லை… பரவாயில்லை எல்லாம் கால மாற்றம்… என்று எண்ணியவாறு ஒரு இருக்கையை இறுக்கப் பற்றியவாறு பயணத்தைத் தொடர்ந்தார்…
நீண்ட தூரம் பயணித்த பின்பு ஒரு குரல் “கந்தையா வாத்தியார் கந்தையா வாத்தியார் வாங்கோ இந்த இருக்கையில் அமருங்கள் என்று அழைத்தது….. எட இந்தக் காலத்திலும் இப்படி ஒரு மாணவனா? என மனதிற்குள் எண்ணிய கந்தையா வாத்தியார் “பரவாயில்லை அப்பா நின்று வருவது தான் எனக்கு இலகுவாக உள்ளது நீ அமர்ந்து வா’ என்று சொன்னார் அதற்கு அந்த மாணவன் “இல்லை வாத்தியார் நான் இறங்கும் இடம் வந்துவிட்டது அதுதான் உங்களைக் கூப்பிட்டேன் என்றான்
கந்தையா வாத்தியார் தனக்குள்ளே மெல்ல சிரித்துக் கொண்டார்…… காலம் மாறலாம் மனிதம் மாறக் கூடாது என எண்ணியவர் பேரூந்தில் போன “பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா” என்னும் பாடலை இரசித்தவாராகப் பயணித்தார்
மீண்டும் வருவார் கந்தையா வாத்தியார்
அரியாலையூர் யசிதீபன்