மாதங்களில் சிறந்தது மார்கழி என்பார்கள். மங்கையர்களுக்குப் பிடித்ததும் அந்த மாதமே என்பார்கள். சைவசமயத்தவர்களைப் பொறுத்தவரை உடலும் உள்ளமும் ஒருவகைத் தூய்மையை உணர்கின்ற மாதம். காரணம் அது திருவெம்பாவைக் காலம். அதிகாலை வேளையில் அயலவர்களோடும் உறவினர்களோடும் கூடி, ஆலயத்தை நாடி, திருவெம்பாவை பாடி, பக்தியிலும், மகிழ்ச்சியிலும் மூழ்கியிருக்கும் மாதம். மாணிக்கவாசக பெருமான் பாடிய திருவெம்பாவை மார்கழி மாதத்திற்கே ஒரு தனித்துவமான பண்பாட்டுக் கோலத்தை உருவாக்கிவிட்டது.

சைவர்களின் பண்பாடாக மட்டுமன்றித் தமிழர்களின் பண்பாடாகவே அது விழங்குகின்றது. தத்துவம் பக்குவப்பட்ட ஆன்மாக்கள், மும்மலங்களில் மூழ்கிக் கொண்டிருக்கும் பக்குவப்படாத ஆன்மாவின் மேல் அன்பு கொண்டு அதனை எழுப்பி இறைவனின் அருள் பெற அழைத்துச் செல்வது என்பதே திருவெம்பாவையில் பொதிந்து கிடக்கும் தத்துவப் பொருளாகும்.
திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகரால் முழுமுதற் கடவுளான சிவபெருமானைக் குறித்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இந்த திருவெம்பாவை பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பாடல்களையும் இணைத்து மார்கழி மாதத்தில் பாடுவதை சைவர்கள் மரபாக கொண்டுள்ளார்கள்.

கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் இருக்கும் பாவை நோன்பின் ஒரு பகுதியாக இந்த பாடல்களைப் பாடுவது உள்ளது. இந் நோன்பைக் கன்னிப் பெண்களே கூடுதலாகக் கடைப்பிடிப்பர். இக்காலத்தில் கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து தம் தோழியரையும் அழைத்துக் கொண்டு நீர் நிலைகளுக்குச் சென்று அம்மையப்பர் புகழ்பாடி நீராடுவர். இதனைக் கண்ணுற்ற மாணிக்கவாசகப் பெருமான் இந்நிகழ்ச்சியையே திருவெம்பாவையாக 20 பாடல்களாகப் பாடினார்.

இப்பாடல்களையே இன்றும் திருவெம்பாவைக் காலங்களில் கோவில்களில் பாடுவது வழக்கம். திருவெம்பாவை பூஜைக்குரியதாக பிட்டு படைக்கப்படுகின்றது. இதனால் இப்பூஜை பிட்டுப் பூஜை எனவும் அழைக்கப்படும். நூல் திருவெம்பாவை இருபது பாடல்களைக் கொண்டது. முதல் எட்டு பாடல்கள் சிவபெருமானின் புகழ்களைப் பாடியபடி நீராடச் செல்லுதலைக் குறிப்பது. ஒன்பதாவது பாடல் சிவபெருமானிடம் தங்கள் வேண்டுதல்களைக் கூறுவதாகவும், பத்தாவது பாடல் நீராடுதலையும் குறிப்பன.

மாணிக்கவாசகர் திருவண்ணாமலையை தரிசிக்கும் போது பாடப் பெற்றது திருவெம்பாவை. சிவனுக்குத் திருத் தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது திருவெம்பாவை. திருவெம்பாவைக்குச் சிறப்பாக விளங்குவது “எம்பாவாய்” என்னும் தொடர் மொழி. அதன் இருபது பாடல்களிலும் பாட்டின் இறுதியில் வருவதால் அதுவே இதற்குப் பெயராய் அமைந்தது. இந்த”ஏலோர் எம்பாவாய்” என்ற தொடர் பொருளற்றது என்றும், பாவை போன்ற பெண்ணே நீ சிந்திப்பாய் என்று பொருள் தருவதாகவும் இரு கருத்துகள் நிலவுகின்றன. மேலும், சிவசக்தியின் அருட்செயலையும், நவசக்திகள் ஒன்று சேர்ந்து சிவபெருமானைத் துதிப்பதும் திருவெம்பாவையின் தத்துவமாகும். மனோன்மணி, சர்வ பூதமணி, பலப்பிரதமனி, பலவிகரணி, கலவிகரணி, காளி, ரெளத்திரி, சேட்டை, வாமை என்ற ஒன்பது சக்திகளின் ஏவலால் பிரபஞ்ச காரியம் நடைபெறும். இதனை உணர்ந்து நோற்பதே பாவை நோன்பாகும்.

பெண்கள் நோன்பு நோக்கச் செல்லும் போது தூங்குபவளை எழுப்பும் காட்சி திருவெம்பாவையில் வருகின்றது. ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் ஜோதி, சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்து ஈசன், அத்தன், ஆனந்தன், அமுதன், விண்ணுக்கு ஒரு மருந்து, வேத விழுப்பொருள், சிவன், முன்னைப் பழம், தீயாடும் கூத்தன் என்று பலவாறு இறைவனைக் குறித்துப் பாடி நீராடி, சிவபெருமானிடம் அடியார்கள் வேண்டுவதை திருவெம்பாவை’ விளக்குகிறது.