சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களினுடைய சம்மேளத்தின் (FIFA – ஃபிஃபா) இந்த ஆண்டுக்கான நடுவர்களில் ஒருவராக, இலங்கை – கல்முனையைச் சேர்ந்த ஏ.பி.எம். ஜப்ரான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து 2021 ஆம் ஆண்டுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 6 நடுவர்களில் – ஜப்ரான் மட்டுமே, தமிழ் பேசும் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறவராக உள்ளார்.
இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் நடுவர்களுக்கான தரம் – 3 (Grade – 3) தேர்வில் 2010ஆம் ஆண்டு வெற்றி பெற்றதை அடுத்து, உதைப்பந்தாட்ட நடுவராக தனது பயணத்தை 16ஆவது வயதில் இவர் தொடங்கினார்.
2017ஆம் ஆண்டிலிருந்து இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் முதல் தர (Grade – 1) நடுவராக இவர் பணியாற்றி வருகிறார். இப்போது இவருக்கு 26 வயதாகிறது.
2010ஆம் ஆண்டிலிருந்து இதுவரை, 150க்கும் மேற்பட்ட முக்கியமான கால்பந்து போட்டிகளில் – தான் நடுவராகப் பணியாற்றியுள்ளதாக, ஜப்ரான் தெரிவித்தார்.
அவற்றில் இலங்கை சாம்பியன் லீக், எப்.ஏ. கிண்ணம் மற்றும் ஜனாதிபதி கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளும் உள்ளடங்கும் எனவும் அவர் கூறினார்.
மேலும் மாலைத் தீவு சாம்பியன் லீக் உதைப்பந்தாட்டப் போட்டிகளிலும் இவர் இரண்டு முறை நடுவராகப் பணியாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.