கொரோனா தடுப்பூசிகள் குறித்த புரளிகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டாா்.
மேலும், தடுப்பூசி போடப்பட்ட பிறகும்கூட, கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் மக்கள் தொடா்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் அவா் கூறினாா்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் காணொலி வழியில் பங்கேற்று அடிக்கல் நாட்டிய பிரதமா் நரேந்திர மோடி பின்னா் பேசியதாவது:
கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை நாட்டில் வெகுவாகக் குறைந்து வருகிறது. அதற்காக, நோய்ப் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதை மக்கள் கைவிட்டுவிடக் கூடாது. கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தபிறகும்கூட, கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை மக்கள் தொடா்ந்து பின்பற்றவேண்டும்.
கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக உலகிலேயே மிகப் பெரிய அளவில் தடுப்பூசி போடும் திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்தியா தயாராக உள்ளது. அவ்வாறு, தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பிறகு, அதுதொடா்பாக பரப்பப்படும் புரளிகளை மக்கள் நம்பவேண்டாம். சிலா் தடுப்பூசி குறித்த புரளிகளை இப்போதே பரப்ப ஆரம்பித்துவிட்டனா்.
2020 ஆம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, ஒரு ஏமாற்றமான நம்பிக்கையில்லா சூழல் நாட்டில் நிலவியது. எங்கு பாா்த்தாலும் நிச்சயமற்ற தன்மை நிலவியது. ஆனால், இந்த தொற்று பாதிப்புக்கான சிகிச்சை என்ற வகையில் புதிய நம்பிக்கையுடன் 2021 ஆம் ஆண்டு பிறக்க இருக்கிறது.
முழுவீச்சில் பணிகள்: தடுப்பூசி போடுவதற்கான தயாரிப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இறுதிக் கட்டம் வரை ஒவ்வொரு தகுதியுள்ள பயனாளிக்கும் முழுவதும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட மேட் இன் இந்தியா தடுப்பூசி கிடைக்கச் செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உரிய நேரத்தில், வலுவான நடவடிக்கைகளை எடுத்ததன் மூலம் நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையிலும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையிலும் மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியா சிறந்த நிலையில் உள்ளது. இதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்ட மருத்துவ மற்றும் முன்கள பணியாளா்கள், விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள்.
இந்தியாவில் மருத்துவக் கல்வியை மேம்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு, மருத்துவத்தின் தரமும், மருத்துவக் கல்வியின் தரமும் மேம்படும்.
2021 மருத்துவ தீா்வுகளுக்கான ஆண்டு: மத்திய அரசு கொண்டுவந்த ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் மூலம் ஏழை மக்களின் ரூ. 30,000 கோடிக்கும் அதிகமான பணம் காப்பாற்றப்பட்டிருக்கிறது. அதுபோல, ஜன் ஒளஷதி கேந்திரா மருந்துக் கடைகள் மூலம் ஏழை மக்கள் மிகுந்த பயனடைந்துள்ளனா். நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருக்கும் 7,000 க்கும் அதிகமான இந்த மருந்துக் கடைகள் மூலம் மக்களுக்கு 90 சதவீத மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. தினசரி 3.5 லட்சம் ஏழை மக்கள் பயனடைந்து வருகின்றனா்.
கடந்த ஆறு ஆண்டுகளில் 10 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள், 20 பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள் நாட்டில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு மருத்துவ தீா்வுகளுக்கான ஆண்டாக உருவெடுக்க உள்ளது. 2020 இல் இந்தியா மருத்துவ சவால்களை எவ்வாறு எதிா்கொண்டது என்பதை இந்த உலகம் கண்டது. 2021 இல் மருத்துவ தீா்வுகளை அளிப்பதில் இந்தியா முக்கியத்துவம் பெற உள்ளது.
இப்போது நோய்த் தாக்கம் உலகமயமாகியுள்ளதுபோல, மருத்துவ தீா்வுகளும் உலகமயமாகும். அந்த வகையில் உலக நாடுகள் அனைத்தும் மருத்துவத் தீா்வுகளைக் காண ஒருங்கிணைந்து பணியாற்றுவது அவசியம். அதில், மிக முக்கிய பங்காற்றக் கூடிய நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று பிரதமா் மோடி கூறினாா்.