கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் விரல்கள் கருப்பு நிறத்தில் அழுகிய புகைப்படம் ஒன்று வாஸ்குலர் மற்றும் என்டோ வாஸ்குலர் சர்ஜரி என்ற மருத்துவ இதழில் வெளியானது.

இந்தப் புகைப்படம் பலருக்கும் பயத்தை ஏற்படுத்தியது. காரணம், கொரோனா வைரஸால் நுரையிரல், சிறுநீரகம் உள்ளிட்டவை பாதிக்கப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில், உடலில் உள்ள உறுப்புகள் அழுகுவதற்கும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த இதழில் வெளியான கட்டுரையில், 86 வயதான மூதாட்டி ஒருவர் கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் அவருக்கு எந்த அறிகுறியும் உடலில் காட்டவில்லை. திடீரென உடலில் உள்ள பாகங்கள் கருமையாக மாறி அழுகல் ஏற்பட்டவுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டது.
அப்போது, இத்தாலி மருத்துவர்களின் கூற்றுப்படி கொரோனா வைரஸின் உட்சபட்ச நிலைகளில் ஒன்றான நீக்ரோடிக் எனப்படும் ரத்த உறைதலால் அவர் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பேசிய மருத்துவர்கள், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டியின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடு குறைந்து இதயத்துக்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறைந்திருந்ததாக தெரிவித்துள்ளனர்.
ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு, ஆரோக்கியமான திசுக்கள் சேதமடைத்திருந்ததாக தெரிவித்த மருத்துவர்கள், ரத்தநாளங்கள் பாதிக்கப்பட்டால் நிச்சயமாக ரத்தம் உறைதல் ஏற்படும் எனவும் கூறினர்.
மார்ச் மாதத்தில் ரத்த அழுத்தம் குறைந்திருந்தற்காக மருத்துவர்கள் அதற்கான மாத்திரைகளை பரிந்துரைத்துள்ளனர். இருப்பினும் அதில் எந்த மாற்றமும் ஏற்படாமல் விரல்களில் ரத்தம் உறையத் தொடங்கியதாக தெரிவித்தனர்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பரிசோதனைகளின் அடிப்படையில் மூன்று விரல்களிலும் செல்கள் இறந்துவிட்டதை உறுதிசெய்து அகற்றப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
விரல்களில் உள்ள இறந்த செல்களை ஆய்வு செய்தபோது திரம்போஸிஸ் (thrombosis) அறிகுறி இருந்ததாகவும், இத்தாலியில் கொரோனா பாதிக்கப்பட்ட பலருக்கும் இத்தகைய அறிகுறிகள் இருப்பதை பார்க்க முடிந்ததாகவும் பேராசிரியரும், ஆய்வாளருமான கிரகான் கூரூக் கூறியுள்ளார்.
மற்ற வைரஸ்களில் இருந்து பல்முனைகளை கொண்ட கொரோனா வைரஸ் வேறுபட்டதாக இருப்பதாக கூறிய அவர், இதனுடைய ஹைபர்கோகுலபல் (hypercoagulable state) நிலை ரத்தம் உறைவதற்கு காரணமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.