கடந்த ஜனவரி 11ஆம் திகதி முதல், சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றியவாறு, கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகள் திறக்கப்பட்டபோதிலும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ளன.
ஆயினும் க.பொ.த சாதாரண தரத்தில் பயிலும் மாணவர்களுக்கு மாத்திரம் முதற் கட்டமாக நாளை (25) முதல் பாடசாலைகளை மீண்டும் திறக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
அதற்கமைய, மேல் மாகாணத்திலுள்ள 11 கல்வி வலயங்களுக்குட்பட்ட 1,576 பாடசாலைகளில் 907 பாடசாலைகள் நாளை முதல் க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளன.
இதேவேளை, மாணவர்களின் போக்குவரத்துக்காக, இலங்கை போக்குவரத்து சபையின் சிசு செரிய பஸ் சேவை உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, தலைவர் கிங்ஸ்லி ரணவக தெரிவித்தார். தேவை ஏற்பட்டால் மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.