கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை பெண் பணியாளருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கு பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் உட்பட அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 20 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

வேலணை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் யாழ். மாவட்ட மக்கள் கொரோனா சமூகத்தொற்று தொடர்பாக விழிப்பாக செயற்படுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவசர அறிவிப்பை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்தச் சந்தர்ப்பத்தில் யாழ். மாவட்ட பொது மக்கள் அவதானமாகச் செயற்பட்டு தங்களைத் தாங்களாகவே பாதுகாத்துக்கொள்ள முன்வர வேண்டும்.
இதனடிப்படையில் யாழ். மாவட்ட மக்கள் அநாவசியமற்ற நடமாட்டங்களைத் தவிர்த்து வீடுகளில் இருப்பதோடு, வீதிகளில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிந்து மற்றும் சமூக இடைவெளியினைப் பேண வேண்டும்.
மேலும், சமூகத் தொற்று எந்த உருவில் எங்கே, எப்போது தொற்றும் என யாருக்கும் தெரியாது. எனவே, கொரோனா தொற்றிலிருந்து யாழ். மாவட்ட மக்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.
பொது இடங்கள் மற்றும் வியாபார நிலையங்களில் பொதுமக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.
அத்தோடு அரச அலுவலகங்கள் வழமைபோல் செயற்படும். இந்த விடயங்களை யாழ். மாவட்ட மக்கள் அனைவரும் கருத்தில் எடுத்து செயற்பட வேண்டும்.
யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியில் மினுவாங்கொட பகுதியில் இருந்து வருகை தந்தோர் தொடர்பாக சுகாதாரப் பிரிவினர் மற்றும் பாதுகாப்புப் பிரிவினரால் நடவடிக்கைகள் மேற் கொண்டு வருகின்றனர் என அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.