நட்பாகப் பழகிய சிறுமியிடம் தவறான நோக்கத்துடன் பழகிய இளைஞர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்ததால் சிறுமி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் துாத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில், சிறுமிக்கு இளைஞர்கள் சிலர் செல்போன் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்ததில் மனமுடைந்த சிறுமி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவத்தில் ஒரு இளைஞரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. 10-ம் வகுப்பு முடித்து விட்டு, மகளிர் சுய உதவி குழு கடன் வழங்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
கடன் வழங்குவது தொடர்பாக களத்தில் இறங்கி வேலை பார்க்க வேண்டிய சூழல் காரணமாக சிறுமிக்கு சில இளைஞர்கள் சரவணன், வேல்சாமி, குகன் உள்ளிட்டவர்கள் நண்பர்களாக அறிமுகம் ஆகியுள்ளனர்.
சிறுமி அவர்களிடம் நட்பாக பழகி வந்த நிலையில், இளைஞர்கள் சிறுமியை வேறு கண்ணோட்டத்துடன் பார்த்து வந்துள்ளனர். அச்சத்தில் இருந்த சிறுமியின் தாய், இளைஞர்களோடு பேச வேண்டாம் என கண்டிக்கவும் சிறுமியும் அவர்களிடம் இருந்து விலகியுள்ளார்.
இதை அறிந்த இளைஞர்கள், சிறுமியின் செல்போன் எண்ணுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு தங்கள் பாலியல் இச்சைக்காக தனியிடத்திற்கு வரும்படி நேரடியாக அழைத்து தொந்தரவு கொடுத்துள்ளனர்.
கடந்த 8ம் தேதி அன்று, சிறுமி வீட்டில் இருந்தபோது சரவணன் என்ற இளைஞர், சிறுமியைத் தொடர்பு கொண்டு வெளியே வரும்படியும் இல்லாவிட்டால் தீ வைத்துக் கொளுத்தி விடுவதாகவும் மிரட்டியுள்ளார். பின்னர், சிறுமியின் தெருவுக்கு வந்து சத்தம் போட்டு வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்ததால் சிறுமி பயந்து போய் வீட்டிற்குள் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.சிறுமியில் அலறல் சத்தம் கேட்டவர்கள் உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக குளத்தூர் காவல் நிலைய போலீஸார் சரவணன் உள்ளிட்ட 3 இளைஞர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதில் ஒரு இளைஞர் சிக்கியுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.