ரோமானியர்களின் எழுச்சி

இந்த தொடர் மிக முக்கியமானது. ஏனெனில், முஹம்மது நபி (ஸல்) என்ன தீர்க்கதரிசனம் சொன்னார் என்ற கேள்வியை பொதுவாக கிறிஸ்தவர்கள் அதிகமாக முன்வைப்பதுண்டு.
அவர்களின் இந்தக்கேள்விக்கு சரியான பதிலாக இத்தொடர் அமையும். முகம்மது (ஸல்) நபி ஒரு உண்மையான தீர்க்கதரிசி தான் என்பதை இன்ஷா அல்லாஹ் கிறிஸ்தவர்கள் இந்த தொடரின் வழியாக அறிந்து கொள்ள முடியும்.
அலிஃப்லாம்மீம். (அல்குர்ஆன் : 30:1)
ரோமானியர் அண்டை நாட்டிலே தோல்வியடைந்துள்ளனர். (அல்குர்ஆன் : 30:2)
மேலும், அவர்கள் தங்களுடைய இந்தத் தோல்விக்குப் பின் சில ஆண்டுகளுக்குள்ளாகவே வெற்றியடைந்து விடுவார்கள். (அல்குர்ஆன் : 30:3)
முன்பும் பின்பும் அல்லாஹ்வுக்கே அதிகாரம் உரியதாகும். மேலும், அந்நாளில் அல்லாஹ்வினால் அளிக்கப்பட்ட வெற்றியைக்கண்டு முஸ்லிம்கள் மகிழ்ச்சி கொண்டாடுவார்கள்.
(அல்குர்ஆன் : 30:4)
இந்த ‘மாபெரும் முன்னறிவிப்பை அல்குர்ஆன் நமக்களிக்கின்றது. இந்த இறைவசனம் அருளப்பட்ட காலத்தில் தோற்றுத்துவண்டு போயிருந்த ரோமானியர்கள் மறுபடியும் எழுச்சி பெற்று வெற்றி பெறுவார்கள்.
அதே காலகட்டத்தில் அரேபியாவில் இறை நிராகரிப்பாளர்களை வெற்றி கொண்டு இறை நம்பிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்ற இரண்டு சுபச்செய்திகளை முன்னறிவிப்புக்களாக இவ்வசனம் அளிக்கின்றது. இவ்வசனம் அருளப்பட்ட வரலாற்றுப்பின்னணியையும் நிகழ்வுகளையும் பார்ப்போம்.
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இறைத்தூதராக அறிவிக்கப்படுவதற்கு எட்டாண்டுகளுக்கு முன்பு ரோம மன்னர் மாரிஸுக்கு (Maurice) எதிராகக் கலகம் வெடித்தது. ஃபோகாஸ் (Phocas) என்பவர் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார்.
சீசருடைய (Ceasar) கண்ணெதிரே அவருடைய ஐந்து மகன்களைக்கொன்று போட்டதோடு சீசரையும் கொன்று அனைவருடைய தலையையும் கான்ஸ்டான்டி நோபிள் நகரில் நடுவீதியில் தொங்க விட்டார்.
சில நாட்களுக்குப்பிறகு சீசருடைய மனைவியையும் மூன்று பெண்களையும் கொன்றார். ரோம தேசத்தின் மீது படையெடுப்பதற்காகக் காத்துக்கொண்டிருந்த பாரசீக மன்னருக்கு நல்ல வாய்ப்பாக இது அமைந்தது.
மாரீஸுடைய உதவி மற்றும் ஒத்தாசையினால் தான் குஸ்ரு பர்வேஸ் (Khasrau) பாரசீகத்தில் முடிசூடினார். மாரீஸை தன்னுடைய தந்தையாகவே பாவித்து வந்தார். ‘என்னுடைய மானசீக தந்தையையும் அவருடைய பிள்ளைகளையும் கொன்று குவித்த ஃபோகாஸைப் பழிவாங்குவேன்’ என்று அவர் சூளுரைத்தார்.
கி.பி.703ல் ரோம தேசத்தின் மீது படையெடுத்தார்.
சில ஆண்டுகளுக்குள் ஃபோகாஸுடைய படைகளைப் படிப்படியாகப் பின்னடையச் செய்து மேற்காசியாவின் அபிசீனியா வரையிலும், மறுபுறம் சிரியாவின் ஹலப் மற்றும் அன்தாகியா பகுதிகள் வரையிலும் தன் ஆளுமையின் கீழ் கொண்டு வந்தார்.
ரோம தேசத்து உயர்குடிகளும் பிரபுக்களும் ஃபோகாஸுடைய கையறு நிலையைக் கண்ணாறக் கண்ட பிறகு ஆட்சியைக் காப்பாற்றக்கோரி ஆப்பிரிக்க ஆளுநரிடம் தூது விடுத்தனர். அதற்கிணங்கிய அவர் ஒரு பெரும் படையோடு தன்னுடைய மகன் ஹெர்குலிஸை (Heraculius) கான்ஸ்டான்டி நோபிளுக்கு அனுப்பி வைத்தார்.
ஃபோகாஸைப் பதவியிலிருந்து கீழிறக்கி தானே சீசராக முடி சூட்டிக் கொண்டார். ஃபோகாஸ் மார்ஸோடு எவ்விதம் நடந்து கொண்டோரோ, அதே போல ஹெர்குலிஸும் நடந்து கொண்டார். கி.பி.610ல் நடைபெற்ற நிகழ்ச்சி இது. இதே ஆண்டில் தான் இறைவனின் புறத்திலிருந்து முஹம்மது ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவனுடைய தூதராக அறிமுகப்படுத்தப்பட்டார்கள்.
ஒழுக்கச்சீர்கேடு என்பதைக் காரணம் காட்டித்தான் பழிவாங்கும் நோக்கில் பர்வேஸ், ஃபோகாஸ் மீது போர் தொடுக்க முனைந்தார். ஃபோகாஸ் வீழ்த்தப்பட்டவுடன் அக்காரணம் நிறைவேறி விடுகின்றது.
புதிய சீசரைத் தேர்ந்தெடுக்கச் செய்து அவரோடு பர்வேஸ் ஒத்துப் போயிருக்க வேண்டும். ஆனால், ஃபோகாஸ் வீழ்ந்த பின்பும் பர்வேஸ் போரை நிறுத்தாமல் தொடர்ந்தார்.
போரின் நோக்கத்தையே இப்போது அவர் மாற்றி விட்டார். நெருப்பை வணங்கும் மஜூஸிகளுக்கும் கிறிஸ்துவத்துக்கும் இடையிலான போராக அதை உருமாற்றி விட்டார்.
கிறிஸ்துவ சமயத்தில் பற்பல பிரிவுகள் இருந்தன. அரசாங்கம் அவற்றிலொரு பிரிவைப் பின்பற்றி வந்தது. ஒரு சில குறிப்பிட்ட பிரிவுகளை வரம்பு மீறியவை, இறை நிராகரிப்புப் போக்கை மேற்கொள்பவை என்று ஒதுக்கி அப்பிரிவினர்களைக் கொடுமைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளாக்கி வந்தது.
குறிப்பாக, நஸ்தூரி (Nestorian), யஃகூபி (Jacobitee) பிரிவினர்களை இப்பிரிவினர்களும் யூதர்களும் நெருப்பு வணங்கிகளான மஜுலிகளுக்கு (adher ents of Mazdaism) எல்லா வகையான ஒத்துழைப்பையும் தந்தனர். பர்வேஸுடைய படையில் மட்டும் இருபத்தாறு ஆயிரம் யூதர்கள் போர் வீரர்களாக இருந்தனர்.
ஹெர்குலிஸ் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பின்பும் இச்சூறாவளியைத் தடுத்து நிறுத்த இயலவில்லை. முடிசூட்டியவுடன் அவர் கேள்விப்பட்ட முதல் தகவல் அள்தாகியாவை ஈரானியர்கள் கைப்பற்றிக் கொண்டனர் என்பது தான்.
தொடர்ந்து கி.பி.613இல் டமாஸ்கஸ் வெற்றி கொள்ளப்பட்டது. கி.பி.614இல் பைத்துல் மக்திஸை வெற்றி கொண்ட ஈரானியர் கிறிஸ்துவ உலகையே துவம்சம் செய்தனர். அந்நகரில் மட்டும் 90,000 கிறிஸ்துவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். மிகப்பெரும் புனிதத் திருச்சபையாக கிறிஸ்தவர்கள் கருதி வந்த Holy Sepulchre பாழ்படுத்தப்பட்டது.
இயேசு கிறிஸ்து அறையப்பட்டதாக கிறிஸ்துவர்கள் நம்பும் புனித சிலுவை’யை மஜுஸியர் தம் மதாயின் நகருக்கு அனுப்பி வைத்தனர். புனிதப்பேராயர் ஸகரியாவையும் அவர்கள் பிடித்துக் கொண்டு போயினர். பெரும் பெரும் ‘திருத்தலங்கள்’ எல்லாம் அடியோடு நாசமாக்கப்பட்டன. வெற்றி போதையில் பர்வேஸ் மிதந்தார்.
பைத்துல் மக்திஸ் நகரிலிருந்தபடி ஹெர்குலிஸுக்கு அவர் எழுதிய கடிதத்தில் இந்த ‘மிதப்பை’ நாம் காண முடிகின்றது.
அவர் எழுதினார்: கடவுளர் யாவரிலும் உயர் கடவுளான அகிலமனைத்திற்கும் அரசனான குஸ்ரூ தன்னுடைய கீழ்த்தரமான இழிவடைந்த அடிமையான ஹெர்குலிஸுக்கு எழுதிக் கொண்டது.
உன்னுடைய இறைவனை நம்புவதாக நீ கூறிக் கொள்கிறாய். உன்னுடைய இறைவன் என்னிடமிருந்து ஏன் பைத்துல் மக்திஸைக் காத்துக் கொள்ளவில்லை?
இந்த வெற்றிக்குப் பின்பு ஓராண்டிற்குள் ஜோர்தான், ஃபலஸ்தீனம், செனாய் பள்ளத்தாக்கு போன்ற பகுதிகளை எல்லாம் பாரசீகப் படையினர் வென்று எகிப்து எல்லைக்குள் காலடி பதித்து விட்டனர்.
அதே கால கட்டத்தில் மக்காவில் அதை விடவும் வரலாற்றுச் சிறப்புமிக்க பேராட்டமொன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது.
ஓரிறைக் கொள்கையைப் பின்பற்றுபவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களுடைய தலைமையிலும் ஓரிறைவனை ஏற்க மறுத்து இறைவனல்லாத எண்ணற்ற பலவற்றை இறைவனாக எண்ணி வணங்கி வந்தோர் குறைஷித் தலைமையிலும் முனைந்திருந்தனர்.
நிலைமை மோசமாகிக் கொண்டே சென்றது. வேறு வழியே இல்லாமல் கி.பி.615 இல் இறை நம்பிக்கையாளர்கள் ஒரு கூட்டமாகத் தாம் பிறந்து, வளர்ந்த சொந்த மண்ணை விட்டு விட்டு புலம் பெயர்ந்து அபிசீனியாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்டனர். ரோமானியர்களின் ஆளுகையின் கீழிருந்த கிறிஸ்துவ அரசாங்கம் அது.
ரோமானியப் பேரரசை ஈரானியர்கள் வென்று விட்டார்கள் என்பதே எங்கும் பேச்சாக இருந்த காலகட்டம் அது. மக்கத்து நிராகரிப்பாளர்கள் விழாவாக இதைக் கொண்டாடினார்கள் எனலாம்.
நெருப்பை வணங்கும் இந்த மஜுஸிகள் வேத வெளிப்பாடு அருள்வதாகச் சொல்லிக் கொள்ளும் கிறிஸ்தவர்களை ஒரு வழி செய்து விட்டார்கள். பார்த்தீர்களா? என்று முஸ்லிம்களைப் பார்த்து அவர்கள் எள்ளி நகையாடினர்.
இதைப்போல நாங்களும் உங்கள் புதிய மார்க்கத்தைக் காலில் மிதித்துத் துவம்சம் செய்து விடுவோம் இந்தக் காலப்பின்னணியில் தான் இந்த இறைவசனம் அருளப்பட்டது.
இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள இரண்டு நற்செய்திகளும் நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் தொலை தூர வானத்திலும் தென்படவில்லை.
ஒரு புறம் ஒரு பிடிக்குள் அடங்குமளவுக்கு முஸ்லிம்களின் சிறு கூட்டம். இந்த சுபச்செய்தி வந்த பின்பும் ஓர் எட்டாண்டுகள் சொல்லொண்ணா வேதனைகளையும் வதைகளையும் அவர்கள் அனுபவித்து வந்தார்கள். மறுபுறம் ரோமானியர்கள் வீழ்ந்து கொண்டே சென்றார்கள்.
கி.பி.619இல் எகிப்து முழுவதும் ஈரானியர் வசம் சென்று விட்டது. தராப்லீஸையும் தொட்டு வெற்றிக்கொடி நாட்டினார்கள் ஈரானியர். மேற்காசியாவிலிருந்து ரோமானியப் படைகளை பாஸ்ஃபோரஸ் எல்லை வரை ஓட ஓட விரட்டினர்.
கி.பி.617இல் கான்ஸ்டான்டி நோபிளுக்கு அருகிலுள்ள கில்கதூனை (Chalcedon) கைப்பற்றினர். என்ன சொன்னாலும் சரி, ஏற்றுக்கொண்டு அடிபணியத்தயார் என்று சீசர் பாரசீக மன்னருக்குச் சொல்லி அனுப்பினார்.
‘தன்னுடைய இறைவனான சிலுவையில் அறையப்பட்டவரைத் துறந்து விட்டு நெருப்பை மாபெரும் கடவுளாக ஏற்றுக்கொண்ட நிலையில், விலங்குகளால் பிணைக்கப்பட்டு என் முன்னால் கொண்டு வந்து நிறுத்தப்படாதவரை சீசருக்கு அபயம் கிடையாது’ என்று அதற்குப்பதில் கிடைத்தது.
நிலைமை மோசமடைந்து முற்றிப்போய் கான்ஸ்டான்டி நோபிள் நகரையும் துறந்து விட்டு சீசர் கர்தாஜினா- தற்போதைய ட்யூனிஸ் (Carthage) தஞ்சம் புக நேர்ந்தது.
வான்மறை குர்ஆனின் இந்த அருள் வெளிப்பாட்டை அடுத்த எட்டாண்டுகள் நிலைமை இவ்வாறு மோசமாகிக் கொண்டே சென்றது. புதைந்து கொண்டுள்ள இவ்வரசு மீண்டுமொரு முறை எழுந்து நிற்கும் எனும் நம்பிக்கையே யாருக்கும் எழவில்லை எனப்புகழ்பெற்ற ஆங்கில வரலாற்றாசிரியர் கிப்பன் குறிப்பிடுகிறார்.
எந்த வாய்ப்புமே இல்லாத நிலையில் இத்தகைய வசனம் அருளப்பட்டுள்ளதைக் கண்ட மக்கத்து இறை நிராகரிப்பாளர்கள் கை கொட்டிச்சிரித்தனர். கிண்டலடித்தனர். குறைஷித்தலைவர்களிடம் அபுபக்கர் பந்தயம் கட்டினார்.
(இஸ்லாமின் ஆரம்பக்கால கட்டம்! பந்தயம் கட்டுவது தடை செய்யப்படவில்லை)
மூன்றாண்டுகளுக்குள் நிலைமை மாறும். குர்ஆன் கூறியது போல் நடக்கும். பத்து ஒட்டகங்கள் பந்தயம் என்று நிர்ணயமாயிற்று. இறைத்தூதர் (ஸல்) இதைக் கேள்விப்பட்டு அபுபக்கரை வரவழைத்துக் கூறினார்கள்.
‘பிழஃ’ என்னும் சொல்லை குர்ஆன் பயன்படுத்தியுள்ளது. பத்துக்கும் குறைவான ஒற்றைப்படை எண்களை இச்சொல் குறிக்கும். ஆகையால் மூன்றாண்டுகள் என்பதற்குப்பதிலாக ‘பத்தாண்டுகளுக்குள் என்று பந்தயம் கட்டுங்கள். ஒட்டகங்களின் எண்ணிக்கையையும் அதிகரித்து நூறாக்குங்கள்’ என்று கூறினார்கள். அதே போல அபுபக்கரும் உபையோடு பந்தயம் கட்டினார்கள்.
கி.பி.622இல் மக்காவைத்துறந்து இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றார்கள். அங்கு ஹெர்குலிஸ் சீசர் கான்ஸ்டான்டிநோபிளிலிருந்து கருங்கடலை அடைந்து தராப்சூன் பகுதியின் பின்புறமாக பாரசீகப் படையைத் தாக்கும் முயற்சியைத் தொடங்கினார்.
இந்த பதிலடிப் போருக்காக பணவுதவி செய்யுமாறு திருச்சபையிடம் கோரிக்கை வைத்தார். மஜுஸியரிடமிருந்து கிறிஸ்துவ சமயத்தைக் காப்பாற்றுவதற்காக திருச்சபைத் தலைவர் ஸர்ஜீஸ் (Sergius) பக்தர்களின் காணிக்கைகளை வட்டிக்கு வழங்கினார்.
கி.பி.623இல் ஆர்மீனியாவில் தன்னுடைய தாக்குதலை ஹெர்குலிஸ் தொடங்கினார். அடுத்த வருடம் 624இல் அஜர்பைஜானுக்குள் நுழைந்து ஜொராஸ்டிரர் பிறந்த இடமான ‘அர்மியா’வை (Clorumia) தரைமட்டமாக்கினார்.
மஜுஸியர்களின் மிகப்பெரிய நெருப்புக்குண்டத்தை சின்னாபின்னமாக்கினார். இறை அற்புதத்தால் அதே ஆண்டு இங்கு பத்ருப்போரில் முஸ்லிம்கள் மக்கத்து குறைஷியர்களைத் தோற்கடித்துத்தம் வெற்றிப் பயணத்தைத் துவக்கினர்.
இவ்வாறாக, அத்தியாயம் அர்ரூமில் கூறப்பட்ட சுபச் செய்திகள் இரண்டும் பத்தாண்டுகளுக்குள் வியத்தகு முறையில் நடந்தேறின.
தொடர்ந்து ஈரானியர்களை ரோமானியர் வென்று கொண்டே சென்றனர். கி.பி. 627இல் நடைபெற்ற புகழ்பெற்ற நைனுவாப் போரில் ஈரானிய சாம்ராஜ்யத்தின் முதுகெலும்பையே முறித்துப் போட்டனர். ஈரானிய அரச குலத்தினரின் வசிப்பிடங்களையும் வளைத்துப் பிடித்தனர். ஹெர்குலிஸுடைய படை மேலும் முன்னேறி ஈரானின் தலை நகரமான தை ஸஃபூனை (Cresiphon) தாக்கியது.
கி.பி.628இல் குஸ்ரூ பர்வேஸுக்கு எதிராகக் கலகம் தோன்றியது. பர்வேஸ் கைது செய்யப்பட்டார். அவருடைய கண்ணெதிரே அவருடைய 18 பிள்ளைகளும் கொலை செய்யப்பட்டனர். சிறைச்சாலையில் உழன்ற அவர் அங்கேயே மடிந்து போனார். அதே ஆண்டு தான் ஹுதைபிய்யா உடன்படிக்கை நிகழ்ந்தது.
அவ்வுடன்படிக்கையை வான்மறை குர்ஆன் மீப்பெரும் வெற்றியென வர்ணிக்கின்றது. அதே ஆண்டில் பாரசீக மன்னர் இரண்டாம் குபாத் ஆக்கிரமிக்கப்பட்ட ரோம தேசப் பகுதிகளைத் திருப்பியளித்தார்.
கைப்பற்றப்பட்ட புனித சிலுவையையும் திருப்பியளித்து விட்ட ரோமானியரோடு சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார். ‘புனித சிலுவை’யை அதற்குரிய இடத்தில் வைப்பதற்காக கி.பி.629இல் சீசரே பைத்துல் மக்திஸுக்குக் கிளம்பிச்சென்றார்.
அவ்வாண்டில் தான் ஹிஜ்ரத்துக்குப்பிறகு முதல் முறையாக உம்ராவை நிறைவேற்றுவதற்காக மக்கா நகரில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் நுழைந்தார்கள்.
குர்ஆன் கூறியது முற்றிலும் உண்மை என்பதை மறு பேச்சின்றி அனைத்து அரபு தேச இறை நிராகரிப்பாளர்களும் ஒப்புக்கொண்டனர். அவர்களில் பெரும்பாலோர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டனர்.
உமா இப்னு கலஃபுடைய வாரிசுகள் பந்தயத் தொகையான நூறு ஒட்டகங்களை அபுபக்கருக்கு வழங்கினர். அவற்றை ஓட்டிக்கொண்டு அண்ணலாரிடம் அபுபக்கர் ரழியல்லாஹு அன்ஹு வந்து சேர்ந்தார்.
பந்தயம் போடும் போதிருந்த நிலைமை வேறு. இப்போதோ பந்தயம் கட்டுவது ஹராமாக்கப்பட்டு விட்டது. ஆகையால், அவற்றை தானம் செய்து விடும்படி இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லிம் கூறிவிட்டார்கள்.
இந்த திருவசனத்தை அல்லாஹ் இறக்கிய போது, அபூபக்கர் ஸித்தீக் ரளி அவர்கள் வெளியே வந்து, மக்காவின் பகுதியில், (அலிஃப் லாம் மீம், குலிபதிர் ரூம் என்ற வசனத்தை) சப்தமிட்டு (ஓதிக்காட்டினார்கள்). குரைஷிகள் சிலர், அபூபக்கரே! உமது தோழர், நிச்சயமாக ரோம் பாரஸீகத்தை சில ஆண்டுகளில் வெற்றி கொள்ளும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
இது விஷயத்தில் நமக்கு மத்தியில் ஒரு தவணையை ஏற்படுத்துவீராக! அதனைக்குறித்து நாம் ஒரு பந்தயம் வைத்துக்கொள்ளலாமே? என்றனர். அதற்கு அபூபக்கர் ரளி அவர்கள் சம்மதித்தார்(சரி என்றார்)கள்.
இந்த பந்தயம் கட்டுதல் ஹராமாக்கப்படுவதற்கு முன்பு நடந்ததாகும். அபூபக்கர் ரழி அவர்களும் முஷ்ரிகுகளும் பந்தயம் கட்டினார்கள். அபூபக்கர் ரழி அவர்களிடம் ‘பில்வு’ (சில ஆண்டு) என்பதற்கு எத்தணை ஆண்டு என்றார்கள்.
அதற்கு அபூபக்கர் (ரளி) மூன்றிலிருந்து ஒன்பது ஆண்டுகள் என்றார்கள். அதற்கவர்கள், நமக்கு மத்தியில் நடுநிலையான ஒரு ஆண்டை பந்தயமாக வைப்பீராக! என்றனர். அதற்கு அபூபக்கர் ரழி அவர்கள் (சரி) ஆறு ஆண்டை பந்தயமாக கணக்கு வைத்துக்கொள்ளலாம் என்றார்கள்.
ஆறாண்டுகள் முடிந்தவுடன் முஷ்ரிகுகள் பந்தயமாக கட்டப்பட்டதை எடுத்துக்கொண்டார்கள். முஸ்லிம்களில் சிலர் கூட, அல்லாஹ் ‘பில்வு சினீன்’-சில ஆண்டுகள் என்று தான் சொல்கிறான். ஏன் இவர் ஆறாண்டு என்று நிரணயித்தார் என்று குறை பேசினார்கள். ஏழாமாண்டு துவங்கியது. ரோமானியம் பாரசீகத்தை (கி.பி. 624-ல்) வெற்றி கொண்டு விட்டது. (இந்த விஷயம் உண்மையானதால்) பலர் அப்போது இஸ்லாத்தை ஏற்றார்கள். (திர்மிதி – 3194)
மற்றொரு அறிவிப்பில்,
இவ்வாயத்தை இறைவன் அருளிய பொழுது ஹஸ்ரத் அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்கள் ‘காஃபிர்களிடம் சென்று, உங்கள் சகோதரர் (பாரசீகர்)கள் (ரோமார்களை) வென்று விட்டார்கள் என்று சந்தோசப்படுகிறீர்கள். (எல்லை கடந்து) சந்தோசப்படாதீர்கள்! எங்கள் நபியவர்கள் சொன்னது போல, இறைவனின் மீது ஆணையாக (விரைவில் ரோமர்கள்) பாரசீகர்களை வீழ்த்துவார்கள் என்று கூறினார்கள்.
அப்பொழுது, உபை பின் கலஃப் அல் ஜுஹமீ என்பவன் ‘பொய்யுரைக்கிறீர் என்றான். அபூபக்கர் (ரளி) அவர்கள், ‘அல்லாஹ்வின் விரோதியே! நீதான் மகா பொய்யன் என்றார்கள். நமக்கிடையில் ஒரு தவணையை ஏற்படுத்துவீராக! அதனைக்குறித்து நான் உம்மிடம் பந்தயம் கட்டுகிறேன்’ என்றான்.
அதன்படி நம் இருவருக்கு மத்தியில் பத்து வாலிபமான ஒட்டகைகளை, தோற்றவர் வென்றவருக்குக் கொடுக்க வேண்டுமென பந்தயம் வைத்து, மூன்று வருடம் என்பதாக தவணையையும் ஏற்படுத்தினார்கள்.
பின்னர், ஹஸ்ரத் அபூபக்கர் (ரளி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் விஷயத்ததை அறிவித்த பொழுது, ‘பிள்வுன்’ என்பது, மூன்றுக்கும் ஒன்பதுக்குமிடையில் உள்ளது. இத்தகைய சந்தேகமான சந்தர்ப்பங்களில் இவற்றில் நீளமானதைத் தவணையாக்க வேண்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எனவே, அபூபக்கர் (ரளி) அவர்கள் உபை பின் கலஃபை சந்தித்த போது, என்ன தோற்றிவிடீர் போல் தெரிகிறதே என்றான். அதற்கு அபூபக்கர் (ரளி) அவர்கள் இல்லை, பந்தயத்தின் கால அவகாசத்ததையும் பரிசின் எண்ணிக்கையையும் சற்று அதிகமாக்க நாடுகிறேன் என்றார்கள்.
அதன்படி, ஒன்பது வருட தவணையும் நூறு ஒட்டகை பரிசும் என்பதாகப் பந்தயங் (மாற்றிக்) கட்டப்பட்டது. பின்னர், ஹஸ்ரத் அபூபக்கர் (ரளி) அவர்கள் திருமக்காவுக்கு ஹிஜ்ரத் செய்து புறப்பட்ட பொழுது, இப்பந்தயம் வீணாகிவிடுமென உபை பின் கலஃப் பயந்தான்.
அப்பொழுது, ஹஸ்ரத் அபூபக்கர் (ரளி) அவர்களது புதல்வாரன அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் தங்களது தந்தைக்குப் பதிலாக பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.
பின்னர், உஹதுக் போருக்கு காஃபிர்கள் புறப்பட்டனர். அப்பொழுது, அபூபக்கர் (ரளி) அவர்களின் புதல்வாரன அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அவனி(உபை பின் கலஃபி)டம் சென்று பந்தயத்தைக்கூறித் இறைமீது ஆணையாக உன்னை விடமாட்டேன் என தடுக்கவே, அப்பந்தயத்துக்கு வேறொருவனைப் பிணையேற்கச் செய்து விட்டு, உஹதுப் போருக்கு சென்றான்.
அந்தப் போரில் நபி (ஸல்) அவர்களால் அவன் காயமடைந்து திரும்ப வந்து மரணித்தான். பின்னர் இவ்வாயத்து அருளப்பட்டு, ஏழாமாண்டின் ஆரம்பத்தில் ரோமர்களுக்கும் பாரசீகர்களுக்கும் மீண்டும் யுத்தம் தொடங்கி ஹுதைபிய்யா நாளில் பாரசீகர்களை ரோமர்கள் வீழ்த்தி வெற்றிவாகை சூடினார்கள். (தஃப்ஸீருல் பகவீ – இமாம் தீபீ)
ஹஸ்ரத் அபூபக்கர் (ரளி) அவர்கள் உபை பின் கலஃபின் வாரிசுகளிடம் பந்தயத்தில் கூறப்பட்டபடி நூறு ஒட்டகைகளை வாங்கி நபி (ஸல்) அவர்களிடம் வந்து இதனைக்குறித்து விசாரித்தார்கள். அவற்றை தர்மம் செய்யுமாறு கட்டளையிட்டார்கள்.
இதற்குப் பிறகு தான் சூதாட்டத்தையும் மதுவையும் குறித்த விலக்கல்கள் அருளப்பட்டன. தவிர, இவ்வாயத்தில் ‘ரோமர்கள்’ வெற்றியடைவதைக் குறித்த முன்னறிக்கை இருப்பதாலும், இம்முன்னறிக்கையின்படி ‘ரோமர்கள்’ வெற்றி பெற்றதாலும், இவ்வயாத்து நபி (ஸல்) அவர்களது நபித்துவத்தை மெய்ப்பிக்கும் ஆதாரங்களில் ஒன்றென்றும் கூறப்படுகிறது.